செவ்வாய், 28 ஜனவரி, 2014

அணி


சொற்பொருள் பின்வரு நிலை அணி



3.சொற்பொருள் பின்வரு நிலை அணி:-

பாவுள் கையாளப்படும் ஒருசொல் பலமுறை வந்து ஒரே பொருளைத் தருமாயின் அப்பா, சொற்பொருள் பின்வரு நிலையணியாகும்.

காட்டு:-

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூவும் மழை!


மேலுள்ள பாவில் “துப்பு” எனுஞ்சொல் உணவு எனும் ஒரே பொருளைத் தந்து நின்றமையான் அப்பா, சொற்பொருள் பின்வரு நிலையணி ஆயிற்று.

காட்டு:-

சொல்லுக சொல்லைப் பிரிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து!


மேலுள்ள பாடலை உற்று நோக்குக. சொல் என்ற சொல் பலமுறை வரினும் பொருள் மாறுபடாது ஒரே பொருளைத் தருங்கரணியத்தால் அப்பா “சொற்பொருள் பின்வரு நிலையணி” ஆயிற்று.
மேலுள்ள நிழற்படத்திற்குத் தக்க வெண்பா வரைய அனைவரையும் அழைக்கிறேன்...
அகரம் அமுதா

பொருள்பின்வரு நிலையணி!

Posted in 
இற்றைப் பாடத்தைப் பார்க்கும் முன்னம் சிற்சில செய்திகளைப் பகிர்ந்துகொள்ளலாம் எனக்கருதுகிறேன்.

முதலாவதாக:- கவிஞர். தமிழநம்பி அவர்கள்!
முதலில் அவருக்கெனது வாழ்த்துக்களை வெண்பாவில் வழங்கிவிடுகிறேன்:

பல்லாண்டு நீர்வாழப் பண்பார்ந்த பைந்தமிழிற்
சொல்லாண்டு பாடுகிறேன் தூயவரே! –இல்லாண்டு;
செய்யும் தொழிலாண்டு; சேரும் புகழாண்டு;
வையத்துள் வாழ்வாங்கு வாழ்க!


“ஏன்டா! இந்த ஒரு வெண்பாவை வைச்சிக்கிட்டு இன்னும் எத்தனை பேரைத்தார் வாழ்த்துவே? –என உமா அவர்கள் உரைப்பது கேட்கிறது. ஆகையால புதுசா, சுடச்சுட ஒரு வெண்பா:-

வளமை, பெருவாழ்வு, வன்னந் துளங்கும்
இளமை, குறைபடா இன்பம் –அளவின்றி
மன்னும் புகழும் மதியும் மிகப்படைத்(து)
இன்றுபோல் என்றும் இரும்!


வெண்பா எழுதலாம் வாங்க! வலையின் பெருமைக்குறிய ஆசிரியராக நம்மோடு கைகோர்த்திருக்கிறார் தமிழநம்பி அவர்கள். அவரது வரவு நம் வலையின் எதிர்காலத்தை நல்வழிநடத்த வழிவகுப்பதாவும், நம்மைப் புதிய, அரிய வகையில் எண்ணிக் கவிவடிக்கும் தூண்டிகோலாகும். அவரை நாம் எப்படிப் பயன்படுத்திக்கொள்கிறோம் என்பதைப்பொருத்தே நம் அடுத்தகட்ட வளர்ச்சி அடங்கியுள்ளது. நமக்கெழும் ஐயங்களை அவ்வப்பொழுது அவர்வழியாக அறிந்துகொண்டு அவரின் கவியறிவை நாமும் அடைவோமாக.

இரண்டாவதாக:-

புதிய அழகுடன் நடைபோடும் நம் வலையில் நாம் மட்டுமே எழுதி வருகிறோம். புதியவர்களை ஈர்க்கும் கமுக்கத்தை (மர்மம்) நாம் அறிந்திருக்க வில்லையோ என்ற ஐயம் எழுகிறது. நம் வலையைப் பலரின் பார்வைக்கும் விரிவுபடுத்துவது இன்றியமையாததாகிறது. யாம்பெற்ற இன்பம் இவ்வையமும் பெறவேண்டும் அல்லவா? திகழ், உமா, வசந்த் –போன்றவர்கள் (பிரபலமான பதிவர்கள்) ஏதேனும் வழிமுறையிருப்பின் உரைக்கவும்.

மூன்றாவதாக:-
திகழ் அவர்களின் வெண்பாவனம் வலையைப் பார்வையிட நேர்ந்தது. நல்லபல வெண்பாக்களைத் தொகுத்து வழங்கும் அரிய பணியைச்செய்து வருகிறார். ஒவ்வொரு வெண்பாவையும் படிக்கும்போது வியப்பே மேலிடுகிறது. நம் வலையின் பெண்பாற்கவிஞர் உமா அவர்களின் எண்ணிறந்த வெண்பாக்கள் அவ்வலையில் இடம்பெற்றிருப்பது நமக்கெல்லாம் பெருமைக்குரிய செய்தியாகும். வாழ்க அவர் பணி!

நான்காவதாக:-
வெண்பா எழுதலாம் வாங்க வலையை மென்மேலும் மெருகேற்றுவது நம் ஒவ்வொருவரது கடமையுமாகும். பாடத்தில் உள்ளடக்கத்தில், ஈற்றடிகளில், மாற்றங்கள் நடைபெற வெண்டிக் கருதுவீராயின் தயங்காது உரைப்பீராக. இணையத்தில் வெண்பாப் பாடம் நடத்தும் வெகுசில வலைகளில் நம் வலையும் ஒன்று அதைத்தொய்வின்றிக் கொண்டுசெல்ல நாம் நம்மைப் புதுப்பித்துக்கொள்வதுடம் மற்றவரையும் கவர்ந்திழுக்க வேண்டும். அதற்கான வழிமுறைகள் அறிவீராயின் அவனடிமை போன்ற பட்டறிவு படைத்தோர் உரைக்கத் தவறவேண்டாம். நன்றிகள். இனி பாடத்திற்குச் செல்வோம்.


2.பொருள்பின்வரு நிலையணி:-

ஒரு பாவுள் ஒரே பொருளைத் தாங்கிப் பல சொற்கள் கையாளப் படின் அப்பா, பொருள் பின்வரு நிலையணியாம்.

காட்டு:-

அவிழ்ந்தன தோன்றி அலர்ந்தன காயா
நெகிழ்ந்தன நேர்முகை முல்லை –முகிழ்ந்திதழ்
விட்டன கொன்றை விரிந்த கருவினை
கொண்டன காந்தல் குலை!


மேலுள்ள பா, “அவிழ்தல், அலர்தல், நெகிழ்தல், முகிழ்தல், விரிதல்” ஆகிய வெவ்வேறு சொற்களைக் கொண்டிருப்பினும், “மலர்தல்” என்கிற ஒரே பொருளைத் தாங்கியமையான் பொருள் பின்வரு நிலையணியாகும்.

இக்கிழமைக்கு வெண்பாவின் முதற்சொல் வழங்கப்படும்.

இக்கிழமைக்கான வெண்பாவின் முதற்சொல்:- மன்றல்! (மணம்)


அகரம் அமுதா
6

சொல்பின்வரு நிலையணி!

Posted in 
1.சொல்பின்வரு நிலையணி:-

ஒருமுறை வந்தசொல் பலமுறை வந்து வேறுவேறான பொருளைத் தந்து நிற்குமாயின் அப்பா, சொல்பின்வரு நிலையணி வகையாகும்.

காட்டு:-

பூக்காடு நேர்தமிழைப் போற்றிப்பாத் தென்ற(ல்)செய்
பாக்காடு தான்காடு மற்றெல்லாம் –சாக்காடு
சீக்காடு முட்காடு தீக்காடு முக்காடு
நோக்காடு மற்றறைவேக் காடு!
 –அகரம் அமுதா-

மேலுள்ள எனது பாடலில் உள்ள காடு எனுஞ்சொல் முதல் இரண்டடிகளின் முதற்சீரில் வருங்கால் ஒரே பொருளைத் தந்து நிற்பினும், தனிச்சொற்குப் பின் வருங் “காடு” எனுஞ்சொல் (சாக்காடு –இறப்பு, சீக்காடு –நோயுடைய ஆடு, முக்காடு –தலையில் போர்த்துந் துணி, நோக்காடு –நோய், அறைவேக்காடு –வேகாநிலை)ஓரீரசைகளைச் சேர்த்துக்கொண்டமையால் வெவ்வேறு பொருளைத் தந்து நிற்கிறது. ஆதலால் அப்பா, சொல்பின்வரு நிலையாணியாம்.

இக்கிழமைக்கு ஈற்றடி கிடையாது. மேல் வழங்கப்பட்டுள்ள சொல்பின்வரு நிலையணியைப் பயன்படுத்தி வெண்பா வடிக்க வேண்டுகிறேன்.

இக்கிழமைக்கான “சொற்பின்வரு நிலையணி”க்கான சொல்:- (உங்கள் விருப்பத்திற்கேற்ப ஒரு சொல்லைத் தேர்ந்து எழுதவும்)

அகரம் அமுதா

பின்வரு நிலையணி!

Posted in 
.......... .... .... .. .... ... ... ... ... ... ... ... .. மலேசிய பேச்சாளர் பாண்டித்துரை --- அகரம் அமுதா 
.
அணிவகைகளைப் பற்றி நிறையவே நான் முந்தைய பாடங்களிற் பார்த்திருக்கிறோம் ஆயினும், அவ்வவ்வணிகளுக் கேற்றாற்போல் பாப்புனைந்தோமா? என்றால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். நமது வெண்பா எழுதலாம் வலையின் நோக்கம், புதிதாக எழுதுபவர்களை ஊக்கப் படுத்துவதும், முன்பிருந்தே எழுதுபவர்களை மென்மேலும் மெருகேற்றுவதுமேயாகும்.

அந்த வகையில் நம் “வெண்பா எழுதலாம் வாங்க” –வலையின் உயிர்த்துடிப்புக்களான, உமா, வசந்த், அவனடிமையார், திகழ், இராஜகுரு, சவுக்கடியார் யாவரும் எக்கருத்தையும் எளிதிற் சொல்லும் ஆற்றலை இயல்பாகக் கைவரப்பெற்று விளங்குவது கண்டு வியக்கிறேன். இத்தகைய ஆற்றலை நாம் அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவது இன்றியமையாக் கடமையாகிறது. ஆக அணிகள் பற்பலவெனினும் இலகுவாக எளிதாக உள்ள அணிவகைகளுக்கு உட்பட்டு முதற்கட்ட முயற்சிகளைச் செய்யத் தொடங்குதல் சிறப்பெனக் கருதுகிறேன்.

அந்த வகையில் இப்பாடத்திற் காணவிருக்கும் அணி –பின்வரு நிலையணி!

இப்பின் வருநிலையணி மூன்று வகைப்படும். 1.சொல்பின்வரு நிலையணி 2.பொருள்பின்வரு நிலையணி 3.சொற்பொருட்பின்வரு நிலையணி 4.உவமைப்பொருள் பின்வரு நிலையணி.

1.சொற்பின்வரு நிலையணி –ஒருசொல் பலபொருளைத் தருதல்.
2.பொருள்பின்வரு நிலையணி –பலசொல் ஒருபொருளைத் தருதல்.
3.சொற்பொருள் பின்வரு நிலையணி –பலமுறை வந்தும் ஒருசொல் ஒரேபொருளைத் தருதல்.
4.உவமைப்பின்வரு நிலையணி –ஒருபொருளைத் தரும் பலசொல் உவமையாகி நிற்றல்.

இப்பின்வரு நிலையணிகளுக்கான காட்டுகளைப் பின்வரும் பாடங்களில் காண்போம்.

இக்கிழமைக்கு ஈற்றடி வழங்கப்போவதில்லை. மாறாக, தனிச்சொல் தரவிருக்கிறேன்.

இக்கிழமைக்கான தனிச்சொல்:- கோமணம்!

அகரம் அமுதா
8

37.இரட்டுற மொழிதல் அணி!

Posted in 
ஒருசொல்லோ அல்லது சொற்றொடரோ இருவகைப் பொருளைத்தருவது இறட்டுற மொழிதல் ஆகும்.

காட்டு:-

மேகமும், கணினியும்!

பல்கருவி யாக்கலால்; மின்சார விச்சுளதால்;
தொல்புவி எங்குமே தோன்றுதலால்; -எல்லார்க்கும்
நற்பயன் ஆகுதலால்; நானிலத்தே நீர்மேகம்
நற்கணினி நேர்காண் நயந்து!

இப்பாடல் மழைமேகத்திற்கும், கணினிக்கும் உள்ள பொதுத்தன்மைகளைக் குறிப்பிட்டு ஆகையால் இவையிரண்டும் ஒன்றே என்று வரையப்பட்டுள்ளது காண்க.



யானையும், நெற்றாளும்!

கலத்திடை மேவுதலால்; கண்டவர் பற்றித்
தலைக்குமேல் தூக்கி அடித்தலால்; -நிலைத்தநற்
போரிடுதலால்; ஆள்சுமக்கும் போக்கதனால்; யானைக்கு
நேரென்பேன் நெற்றாளை நான்!

இருபொருளைத் தொடர்புபடுத்துப் பேசுவன யாவும் இரட்டுற மொழிதல் அணியாகும்.


ஒற்றுமிகா இடங்கள்!

5.நான்காம் வேற்றுமைத் தொகையில் உயர்திணைப் பெயர்களின் பின் வலிமிகா. (உருபு –கு)

பொன்னி கணவன் -பொன்னிகணவன் (பொன்னிக்குக் கணவன்)
அரச குரு –அரசகுரு (அரசருக்குக் குரு)

6.ஆறாம் வேற்றுமைத் தொகையில் நிலைமொழி உயர்திணையானால் வலி மாகா. (உருபு –அது, உடைய)

அரசி சிலம்பு –அரசிசிலம்பு (அரசியுடைய சிலம்பு)
தோழி பை –தோழிபை (தோழியுடைய பை)

7.ஏழாம் வேற்றுமைத் தொகையில் சில இடங்களில் வலிமிகா. (உருபு -இல், கண், இடம்.)
வாய் பாடு –வாய்பாடு (வாயில்பாடு)

8.எழுவாய்த்தொடரில் வலிமிகா.

கோழி கூவிற்று –கோழிகூவிற்று
புலி தாவிற்று –புலிதாவிற்றி.

குறிப்பு:-எது கூவிற்று? எது கத்திற்று? என்ற வினாவால் வரும் விடை கோழி, புலி எனவரும். இப்படி வந்தால் அது எழுவாயாம். எழுவாயுடன் கூவிற்று தாவிற்று என வினைச்சொல் வல்லெழுத்தில் தொடங்கினாலும் வலிமிகா.

9.ஒடு, ஓடு என்ற மூன்றாம் வேற்றுமை உருபுகளின் பின் வலிமிகா.

அவனோடு போனாள் -அவனோடுபோனாள்
கந்தனோடு பேசினேன் -கந்தனோடுபேசினேன்.

10.ஐந்தாம் வேற்றுமை உருபுகளை அடுத்து வலிமிகா. (உருபு -இருந்து, நின்று)

மரத்திலிருந்து குதித்தான் -மரத்திலிருந்துகுதித்தான்
கையினின்று பறித்தேன் -கையினின்றுபறித்தேன்.

இக்கிழமைக்கான ஈற்றடி:- நெஞ்சு பொறுக்குதிலை யே!

அகரம்.அமுதா
3

36.மடக்கணி!

Posted in 
ஒருமுறை வந்த சொற்களோ, சொற்றொடரோ மீண்டும் வந்து வேறுபொருளைத் தருவது மடக்கணியாகும்.

காட்டு:-

பாலும் புளிக்கப் பழம்கசக்க வேறெதன்
பாலும் இளநெஞ்சம் பாயாதப் -பாலும்இப்
பாலும் இடம்பெயராப் பார்வையென் பார்வையைப்பெண்
பாலும் பருகலுற்றாள் பார்த்து!
 –அகரம்.அமுதா

விளக்கம்:-
இவ்வெண்பாவை உற்றுநொக்குக. பால் எனும் ஒற்றைச் சொல் மீண்டும் மீண்டும் வந்தாலும் வேறு பொருளைத் தாங்கி நிற்றல் காண்க. முதலடியிலுல்ல பால் ஆவின்பாலையும், இரண்டாமடியின் முதற்சீராகிய பால் -மீது எனும் பொருள்படுவதாகவும் (வேறெதன் பாலும் -வேறெதன் மீதும்) இரண்டாமடியின் தனிச்சீரும் மூன்றாமடியின் முதற்சீருமாகிய பால் எனுஞ்சொல் பக்கங்களைக் குறிப்பனவாயும் (அப்பாலும் இப்பாலும் -அப்பக்கமும் இப்பக்கமும்) நான்காமடியின் முதற்சீராகிய பால் இனத்தைக் குறிப்பதாயும் (பெண்பால் -பெண்ணினம்) அமைந்தமை காண்க.

வண்ணம் கரியனென்றும் வாய்வேத நாரியென்றும்
கண்ணன் இவனென்றும் கருதாமல் -மண்ணை
அடிப்பது மத்தாலே அளந்தானை ஆய்ச்சி
அடிப்பது மத்தாலே அழ!
 –கவிகாளமேகம்.

விளக்கம்:-மூன்றாமடியிலுள்ள அடிப்பது மத்தாலே என்பது காலின் அடிப்பகுதியையும் நான்காமடியிலுள்ள அடிப்பது மத்தாலே என்பது தயிர்கடையும் மத்தால் அடிப்பதையும் குறிக்கிறது. ஆக இருவேறு பொருளைக்கொண்ட ஒரே சொற்றொடர் என்பதால் மடக்கணியாயிற்று.

பாண்டியன்தா ரானேன் பசலைமுலைப் பாலானேன்
ஆண்டிகையில் ஏந்திய ஒன்றானேன் -வேண்டியபோ(து)
உள்ளங்கைத் தேனானேன் ஓர்மதலைப் பூத்ததன்பின்
உள்ளங்கைத் தேன்நான் உனக்கு!


விளக்கம்:-
மூன்றாமடியிலுள்ள உள்ளங்கைத் தேன் என்பது உள்ளங்கையில் ஏந்திய இன்சுவை பொருந்திய தேனையும் நான்காமடியிலுள்ள உள்ளங்கைத்தேன் என்பது உள்ளம் கைத்தேன் எனவும் (உள்ளத்திற்கு ஒவ்வாமல் ஆகிவிட்டேன்) இருவேறு பொருள்களைக் கொண்டது.

ஒற்றுமிகா இடங்கள்!

1.அது, இது, எது, அவை, இவை, எவை, அவ்வளவு, இவ்வளவு, எவ்வளவு, அத்தனை, இத்தனை, எத்தனை, அவ்வாறு, இவ்வாறு, எவ்வாறு –என வரும் சொற்றொடர்களை அடுத்து வலிமிகா.

காட்டு:-
அது சென்றது ---அதுசென்றது
அவை கண்டன ---அவைகண்டன
அவ்வளது தொல்லை ---அவ்வளவுதொல்லை
அவ்வாறு சொன்னான் ---அவ்வாறுசொன்னான்.

2.படி, உடைய, ஒரு, இரு, சில, பல –ஆகிய சொற்களைஅடுத்து வலிமிகா.
காட்டு:-
அப்படி செய் ---அப்படிசெய்
என்னுடைய பேனா ---என்னுடைய பேனா
சில கன்றுகள் ---சிலகன்றுகள்
பல பாடங்கள் ---பலபாடங்கள்
இரு கை ---இருகை (இதில் க்-கைச் சேர்த்தால் அமர்வதற்குறிய நாற்காலியைக் குறிக்கும் பெயர்ச்சொல்லாகிவிடும். கவனம்தேவை.)

3.உம்மைத் தொகையில் வலிமிகா.

காட்டு:-
செடி கொடி ---செடிகொடி (செடியும் கொடியும்)
குட்டை குளம் ---குட்டைகுளம் (குட்டையும் குளமும்)

குறிப்பு:-
இராப்பகல், ஏற்றத்தாழ்வு, போன்ற சில சொற்களில் சொல்நயத்திற்காக வலிமிகும் என்பதை அறிக.

4.இரண்டாம் வேற்றுமைத் தொகையில் வலிமிகா. (உருபு-ஐ)

காட்டு:-
வீடு கட்டினேன் ---வீடுகட்டினேன் (வீடுடைக்கட்டினேன்)
கிணறு தோண்டினான் --- கிணறுதோண்டினான் (கிணற்றைத் தோண்டினான்)

இக்கிழமைக்கான ஈற்றடி:- நெருப்பாய் எரிகிறதே நெஞ்சு!

அகரம்.அமுதா
5

35.நிரல் நிறையணி!

Posted in 
பெயரையோ வினையையோ ஒரு வரிசைப்பட நிறுத்தி, அவற்றோடு தொடர்புடையவற்றைப் பின்னர் அவ்வரிசை படக் கூறுவது நிரல் நிறை அணியாகும்.

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது!


விளக்கம்:-இப்பாட்டில் அன்பையும் அறனையும் ஒரு வரிசையிற்படுத்தி அதே வரிசைப்படி, பண்பையும் பயனையும் நிறுத்திப் பாடப்பட்டுள்ளமையான் இப்பா நிரல் நிறை அணியாகும்.

சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா
நோயும் பசலையும் தந்து!


விளக்கம்:-நோய் மற்றும் பசலையைத் தந்து அதற்கு மாறாக தோற்றத்தையும் நாணத்தையும் பெற்றுக்கொண்டதாக வரிசைபடுத்தப் பட்டுள்ளமையான் நிரல்நிறை அணியாகும்.

ஒற்றுமிகு மிடங்கள்!

26.சில வினையெச்சங்களின் முன் வலிமிகும்.
காட்டு:-
கண்டென களித்தான் ---கண்டெனக் களித்தான்
காணா களித்தான் ---காணாக்களித்தான்
காண களிப்புறும் ---காணக்களிப்புறும்
தேடி கண்டேன் ---தேடிக்கண்டேன்.

ஒற்றுமிகுமிடங்கள் முற்றிற்று. அடுத்த பாடத்திலிருந்து ஒற்றுமிகா இடங்களைக் காண்போம்.

இக்கிழமைக்கான ஈற்றடி:- ஈழத் தமிழா எழு!


அகரம்.அமுதா
5

34.வஞ்சப்புகழ்ச்சி அணி!

Posted in 
கவிஞன் தான் கூறவருகின்ற ஒன்றைப் புகழ்வதுபோல் இகழ்ந்தோ, இகழ்வதுபோல் புகழ்ந்தோ உரைப்பது வஞ்சப் புகழ்ச்சி அணியாகும்.

கண்டீரோ பெண்காள்! கடம்பவனத் தீசனார்
பெண்டிர் தமைச்சுமந்த பித்தனார் -எண்டிசைக்கும்
மிக்கான தங்கைக்கு மேலே நெருப்பையிட்டார்
அக்காளை ஏறினா ராம்!
 -கவிகாளமேகம்.

விளக்கம்:-

வெளிப்படையாகப் பார்க்கின்ற போது கொச்சையாக இறைவன் ஈசனை இகழ்வதுபோலும் தோன்றும். ஆனால் பொருள் நுணுகிப்பார்த்தால் "எட்டுத்திசைக்கும் நிகரான தன் கைக்குமேல் நெருப்புச்சட்டியைச் சுமந்து கொண்டு தன் (சிவனின்) வாகனமாகிய அக் காளையின் மேல் எறிப்பயணித்தார் என்பது உண்மைப்பொருள். ஆக இகழ்வதுபோல் புகழ்ந்தமையான் இப்பா வஞ்சப்புகழ்ச்சியாம்.

மாட்டுக்கோன் தங்கை மதுரைவிட்டுத் தில்லைநகர்
ஆட்டுக்கோ னுக்குப்பெண் டாயினாள் -கேட்டிலையோ
குட்டி மறிக்கஒரு கோட்டானை யும்பெற்றாள்
கட்டிமணி சிற்றிடைச்சி காண்!
 -கவிகாளமேகம்.

விளக்கம்:-
கண்ணாக அவதரித்த மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்த திருமாலின் தங்கையானவள் மதுரை மீனாட்சி. மீனாட்சியானவள் தில்லையில் எழுந்தருளியுள்ள ஆடளுக்கு அரசனான ஈசனுக்கு மனைவியாகி, மக்களெல்லாம் (கைகளைப் பெருக்கல் குறிபோல்)மாற்றித் தலையில் குட்டிக் கொண்டு கும்பிடுதற்கு ஒரு தந்தத்தைஉடைய யானை வடிவிலான விநாயகனைப் பெற்றெடுத்தாள் என்பதாம்.

பாடலின் உட்பொருள் புகழ்பாடுவதாக அமைந்திருப்பினும் மேலோட்டமாகப் பார்க்கையில் இகழ்ந்ததுபோல் தோற்றம்கொண்டமையால் இது வஞ்சப்புகழ்ச்சி யாகும்.

ஒற்று மிகுமிடங்கள்!
21.நான்காம் வேற்றுமை விரியில் வல்லினம் வரின் வலிமிகும்.
காட்டு:-
மாணிக்கத்திற்கு கொடு ---மாணிக்கத்திற்குக் கொடு.
உன்றனுக்கு கொடுத்தான் ---உன்றனுக்குக் கொடுத்தான்
எனக்கு தா --- எனக்குத் தா.

22.நான்காம் வேற்றுமைத் தொகை அஃறினைப்பெயர் முன் வலிமிகும்.

காட்டு:-கூலி தொழிலாளி ---கூலித்தொழிலாளி.

தாளி பொன் ---தாலிப்பொன்

23.ஆறாம் வேற்றுமைத் தொகையில் அஃறினைப் பெயர் முன் வல்லினம் வந்தால் வலிமிகும். (ஆறாம் வேற்றுமை உருபுகள் ---அது, உடைய)
காட்டு:-
யானை தலை ---யானைத்தலை
கிளி கூடு ---கிளிக்கூடு
வாத்து சிறகு ---வாத்துச்சிறகு.

24.ஏழாம் வேற்றுமை விரியிலும் தொகையிலும் வலிமிகும். (ஏழாம் வேற்றுமை உருபுகள்:- கண், இடம், இல், இடை)

காட்டு:-
குடி பிறந்தார் ---குடிப் பிறந்தார்(குடிக்கண் பிறந்தார் என்பதன் சுறுக்கம்)இதில் கண் என்னும் உருபு மறைந்து வருகிறது.
நல்லாரிடை புக்கு ---நல்லாரிடைப் புக்கு (இதில் இடை என்னும் உருபு வெளிப்படையாதலைக் காண்க).

25.ய, ர, ழ -ஆகிய மெய்யீற்று அஃறினைப் பெயர்களில் வலிமிகும்.
காட்டு:- (யகரம்)
வேய் கிளை ---வேய்க்கிளை.
வேய் தோள் ---வேய்த்தோள்.

(ரகரம்)
தேர் தட்டு ---தேர்த்தட்டு.
கார் கொடை ---கார்க்கொடை.

(ழகரம்)
தாழ் கதவு ---தாழ்க்கதவு.
வீழ் சடை ---வீழ்ச்சடை.

குறிப்பு:- சில இடங்களில் வல்லினத்திற்கு இனமாகிய மெல்லினமும் இடமேற்கும் என்பதனை நினைவில் கொள்க.

காட்டு:-
வேய் குழல் ---வேய்ங்குழல்
பாழ் கிணறு ---பாழ்ங்கிணறு
ஆர் கொடு ---ஆர்ங்கொடு

இக்கிழமைக்கான ஈற்றடி:- ஈழத் தமிழர் இடர்!


அகரம்.அமுதா

33.வேற்றுப்பொருள் வைப்பணி!

Posted in 
கவிஞன் தான் கூறவிரும்பும் சிறப்புப் பொருளை உலகமறிந்த பொதுப்பொருளைக் கொண்டு விளக்கிக் கூறுவது வேற்றுப்பொருள் வைப்பணியாம்.

பராவரும் புதல்வரைப் பயத்த யாவரும்
உராவரும் துயரைவிட் டுறுதி காண்பரால்
விராவரும் புவிக்கெலாம் வேதமே அன்ன
இராமனைப் பயந்தஎற் கிடருண்டோ? என்றாள்!

பொருள்:-



வணங்கத்தக்க சிறந்த புதல்வரைப் பெற்ற யாவரும் துன்பம் நீங்கி நன்மை பெருவர் என்பது உலகறிநந்த பொதுப்பொருள். அப்பொதுப்பொருளைக் கொண்டு பாரெலாம் வேதமெனப் போற்றும் இராமனைப் பிள்ளையாகப் பெற்ற எனக்குத் துன்பம் உண்டோ? (இல்லை)எனும் சிறப்புப் பொருளைக் கைகேயி மந்தரையிடம் விளக்குகிறாள்.

ஆகவே இப்பாடல் வேற்றுப்பொருள் வைப்பணி.

ஒற்றுமிகுமிடங்கள்!

16.இரண்டாம் வேற்றுமை விரியில் வலிமிகும்.

இரண்டாம் வேற்றுமை உருபு:- ஐ

கண்ணனை திட்டினேன் - கண்ணனைத்திட்டினேன்.

கந்தனை பார்த்தேன் -கந்தனைப்பார்த்தேன்.

விலக்கம்:-
உருபுதெரிய எழுதுவது வேற்றுமைவிரி எனப்படும். உருபு மறைய எழுதுவது வேற்றுமைத்தொகையாகும்.

காட்டு:-

வீடு கட்டினேன் -வேற்றுமைத் தொகை
வீட்டைக் கட்டினேன் -வேற்றுமைவிரி

17.இரண்டாம் வேற்றுமைத் தொகையில் மிக அருகி சிறுபான்மையாக வலிமிகும்.

காட்டு:-

மக பெற்றான் -மகப்பெற்றான். மகவைப் பெற்றான் என வேற்றுமைவிரியிலும் தொகையிலும் வலிமிகுந்தது காண்க.

பாட்டு கேட்டான் -பாட்டுக் கேட்டான். பாட்டைக் கேட்டான்
பூ தொடுத்தான் -பூத்தொடுத்தான். பூவைத்தொடுத்தான்.

18.இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகையின் முன் வலிமிகும்.

காட்டு:-

தயிர்ப்பானை -தயிரை உடைய பானை எனப்பொருள்படும். இத்தொடரில் தயிரை எனும்பொழுது "ஐ" உருபும் "உடைய" என்ற பயனும் உருசேரத்தொக்கி வருவதால் இஃது உருபும் பயனும் உடன்தொக்க தொகை ஆகும்.

சொறி தவளை -சொறித்தவளை
சென்னை கடற்கரை -சென்னைக் கடற்கரை

19.மூன்றாம் வேற்றுமைத் தொகையில் வலிமிகும்.

சுறா பாயப்பட்டான் -சுறாப்பாயப்பட்டான். இத்தொடரில் சுறாவால் பாயப்பட்டான் என்பது பொருள். ஆல் எனும் மூன்றாம் வேற்றுமை உருபு தொகையில் உள்ளது.

20.மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகையில் வலிமிகும்.

பட்டு துணி -பட்டுத்துணி. பட்டினால் நெய்த துணி என்பது பொருள். ஆல் எனும் உருபும் நெய்த எனும் பயனும் தொகையாதலால் வலிமிகுந்தது.

இக்கிழமைக்கான ஈற்றடி:- நங்கைக்கு நாணம் நயம்!

அகரம்.அமுதா
6

32.வேற்றுமையணி!

Posted in 
இருபொருள்களின் ஒற்றுமையைக் கூறியபின் அவற்றை வேற்றுமைப் படுத்திக் கூறுவது வேற்றுமையணியாம்.

காட்டு:-
தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு!


தீபட்டால் பிறரது உடலில் புண்ஏற்படும். அதுபோலவே நாவும் பிறரைச் சொல்லால் சுடும். சுடும்தன்மையால் தீயும் நாவும் ஒருதன்மையுடையதே. ஆயினும் தீவடு ஆறிவிடும். நாவடு ஆறா.

தீ மற்றும் நாவின் செயல்கள் ஒருதன்மையதே யாயினும் அதனால் விளையும் வினைகளில் மாறுபாடுடையமையால் இவ்வணி வேற்றுமையணியாம்.


வலிமிகும் இடங்கள்!
11.நெடில்தொடர் உயிர்த்தொடர் குற்றியலுகரங்களின் அடுத்து டற சொற்கள் இரட்டித்தால் வலிமிகும்.

காட்டு:-
வீடு பாடம் -வீட்டுப்பாடம்
காடு புலி –காட்டுப்புலி
மாறு கருவி –மாற்றுக்கருவி
சோறு பயல் -சோற்றுப்பயல்

குறிப்பு:-
இதில் மெல்லினத்திற்கும் இடையினத்திற்கும் முன்னால் சொற்கள் இருக்குமானால் வலிமிகா.

காட்டு:-
எருது மாடு –எருத்துமாடு
நாடு மரம் நாட்டுமரம்
வீடு நாய் -வீட்டுநாய்

12.அகர இகர ஆய் போய் முதலிய வினையெச்சங்களை அடுத்தும் வலிமிகும்.

காட்டு:-
வர போனார் –வரப்போனார்.
விளக்கம்:- ர் அ-ர இது அகர வினையெச்சம் என நினைவிற் கொள்க.

உலாவ சொன்னான் -உலாவச்சொன்னான்
தேட சொன்னேன் -தேடச்சொன்னேன்.

வாடி போனான் -வாடிப்போனான்.

ட் இ-டி இது இகர வினையெச்சமென்பதை நினைவிற்கொள்க.

கூறி சென்றான் -கூறிச்சென்றான்
கூடி செல்வோம் -கூடிச்செல்வோம்.

ஆய் எனமுடியும் வினையெச்சத்தை அடுத்து வலிமிகும்.

வந்ததாய் சொல் -வந்ததாய்ச்சொல்.
பரிவாய் பார் –பரிவாய்ப்பார்.

பரிவு ஆய் பார்-ஆய் வருமிடங்களில் வலிமிகுவதைக் காண்க.

போய் என்னும் வினையெச்சத்தின் பின்னும் வலிமிகும்.

போய் சொல் -போய்ச்சொல்
போய் பார் –போய்ப்பார்.

13.எட்டு பத்து என்னும் எண்ணுப்பெயரை அடுத்து வரும் சொற்களின் வலிமிகும்.

காட்டு:-
பத்து பாட்டு –பத்துப்பாட்டு.
எட்டு தொகை –எட்டுத்தொகை.

14. ண்டு ந்து ம்பு எனவரும் மென்தொடர்க் குற்றியலுகரத்தின் முன்வலிமிகும்.
காட்டு:-
குண்டு பையன் -குண்டுப்பையன்.
தண்டு கீரை –தண்டுக்கீரை
உணர்ந்து பார் –உணர்ந்துப்பார்.
நடந்து செல் -நடந்துச்செல்
பாம்பு பல் -பாம்புப்பல்.

15. ஒரெழுத்தொருமொழி அஃறிணைப் பெயர்மென் வல்லினம் வந்தால் வலிமிகும்.

காட்டு:-
ஆ சொல் -ஆச்சொல்
கோ பாய்ந்தது –கோப்பாய்ந்தது.
ஈ கடித்தது -ஈக்கடித்தது.

இக்கிழமைக்கான ஈற்றடி: - தண்ணென மாறும் தழல்!
ஆகரம்.அமுதா
4

31.பிறிது மொழிதல் அணி!

Posted in 
உவமானத்தைக் கூறி விட்டு உவமேயத்தைக் கூறாமல் விட்டுவிடுவது பிறிது மொழிதல் அணியாகும்.

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
சால மிகுந்துப் பெயின்!


உவமானம்:-
மென்மையான மயிலிறகு ஏற்றப்பட்ட வண்டியே யாயினும் இறகினை அளவிற்கு அதிகமாக ஏற்றினால் அவ்வண்டியின் வலிய அச்சும்முறிந்துவிடும்.

உவமேயம்:-
எத்துணை வலிமையான போற்படையை உடைய மன்னனாக இருப்பினும் எதிரிகளை வென்றுவிடலாம் என்று ஒன்றன்பின் ஒன்றாய்த் தொடர்ச்சியாகப் போர்நடத்துவானாயின் அது அவனுக்குத் தோல்வியிலேயே முடியும்.

பாடலில் உவமானம் குறிப்பிடப்பட்டு உவமேயம் கூறப்படாமல் மறைக்கப்பட்டுள்ளது.

ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்படை
நாகம் உயிர்ப்பக் கெடும்!

உவமானம்:-
எலிகளான பகை கூடிக் கடல்போல் ஒலியெழுப்பினாலும் என்ன தீமை உண்டாகும்? பாம்பானது மூச்சுவிட்ட அளவில் அவையெல்லாம் அழிந்துவிடும்.

உவமேயம்:-
நெஞ்சுரமற்ற போற்பயிற்சியற்ற பெரும்படையானது திரண்டு வந்து போரிடினும் நெஞ்சுரம் மிக்க சிறுபடையிடம் தோற்றழிந்துவிடும்.


சிறப்புப்பாடம் - ஒற்று மிகுமிடங்கள்!
6) அத்துணை இத்துணை எத்துணை- எனவரும் அளவுகுறிக்கும் சொல்லுடன் கூடிய சுட்டுவினாக்களின் முன்னம் வலிமிகும்;

காட்டு:-
அத்துணை +பெரியது – அத்துணைப்பெரியது
இத்துணை +சிறியது - இத்துணைச்சிறியது
எத்துணை +செலவு – எத்துணைச்செலவு

7) என இனி ஆக போல விட ஆய் மற்ற மற்றை – போன்ற அகர இகர ஐகார ஈற்று வினை எச்சங்களின் பின் வலிமிகும்.

காட்டு:-
நன்றென +சொன்னாள் - நன்றெனச்சொன்னாள்
இனி +செல் - இனிச்செல்
அவனாக +பேசினான் - அவனாகப் பேசினான்
புலிபோல +பாய்ந்தான் - புலிபோலப் பாய்ந்தான்
நஞ்சைவிட +கொடியது – நஞ்சைவிடக்கொடியது
போவதாய் +சொன்னான் - போவதாய்ச்சொன்னான்
உருவமற்ற +கதை – உருவமற்றக்கதை
மற்றை +பொருள் - மற்றைப்பொருள்

8) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தின்பின் வலிமிகும்
காட்டு:-
அறியா +பிள்ளை – அறியாப்பிள்ளை
காணா +பொருள் - காணாப்பொருள்
(குறிப்பு:- காணாத அறியாத த- ஈறுகெட்டது)

9) வன்தொடர்க் குற்றியலுகரத்தை அடுத்துவரும் வேற்றுமைப் புணர்ச்சியிலும் அல்வலிப் புணர்ச்சியிலும் வலிமிகும்.

காட்டு:-
வேற்றுமைப்புணர்ச்சி:-
மாட்டின் +கொம்பு - இன் உருபு கெட்டு மாட்டுக்கொம்பு எனவரும்.
கொக்குத்தலை – கொக்கின் +தலை
ஆட்டின் +காம்பு –ஆட்டுக்காம்பு

அல்வலிப் புணர்ச்சி:-
பருப்பு +உடைய +சட்டி –என்பது பருப்புச்சட்டி எனவரும்
காய்கறிக்கடை – கய்கறிகளை உடைய கடை
கிழக்குத்திசை –கிழக்காகியதிசை

க்கு ச்சு ட்டு த்து ப்பு ற்று –என வல்லினம் இரட்டுறும் சொற்களையடுத்து வரும் கசதப எழுத்துகளையுடைய வினைச்சொற்களின் முன்வலிமிகும்.

செத்து +போ – செத்துப்போ
கற்று +தா – கற்றுத்தா
விட்டு +தா – விட்டுத்தா
இச்சு +தா - இச்சுத்தா
ஏற்று +கொள் - ஏற்றுக்கொள்

10) தனிக்குறிலைச் சார்ந்து வரும் முற்றியலுகரத்தின் பின் வலிமிகும்;

காட்டு:-திரு +குறள் - திருக்குறள்
திரு +புகழ் - திருப்புகழ்
தெரு +கோடி – தெருக்கோடி

இக்கிழமைக்கான ஈற்றடி:- வன்முறையை வேரறுப்போம் வா!

அகரம்.அமுதா
9

30. தற்குறிப்பேற்றணி!

Posted in 
உலகில் நிகழும் இயல்பான நிகழ்வைக் கவிஞன் தன் குறிப்பை ஏற்றிக் குறிப்பிடுவதே தற்குறிப்பேற்றணியாம்.

இருநோக்(கு) இவளுண்கண் உள்ள(து) ஒருநோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து!


பொருள்:- இவளுடைய மையுண்ட கண்களுக்கு இருவகையான பார்வைத்தன்மைகள் உண்டு. ஒன்று நோய் செய்யும். மற்றொன்று அந்நோய்க்கு மருந்தாகும்.

கண்கள் அனைத்துயிர்களுக்கும் பொதுவானவை. அதில் பார்வை என்பது இன்றியமையாதது. அப்பார்வை நோய்செய்வதாயும் நோய்க்கு மருந்தாவதாயும் உரைப்பது தற்குறிப்பேற்றணி வகையாகும்.

அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம்!


பொருள்:- அனிச்சம் பூவும் அன்னப்பறவையின் இறகும் பெண்ணின் தாள்களுக்கு முள்ளுடன் கூடிய நெருஞ்சிப் பழம் போல வருத்தும்.

பெண்ணின் தாள்கள் மென்மை பொருந்தியவையே. ஆயினும் அனிச்சமும் அன்னத்தின் இறகும் அதனினும் மென்மை வாய்ந்தன என்று யாவரும் அறிவர். ஆயினும் கவிஞன் இயற்கைக்கு மாறாக தன்குறிப்பை ஏற்றி உரைக்கிறார்.

மோட்டிளங் கொங்கை முடியச் சுமந்தேற
மாட்டா திடையென்று வாய்விட்டு -நாட்டேன்
அலம்புவார் கோதை அடியிணையில் வீழ்ந்து
புலம்புமாம் நூபுரங்கள் பூண்டு!

பொருள்:-அவளின் நுண்ணிய இடையானது பருத்துயர்ந்த அவளது இளங்கொங்கைகளை முற்றவும் சுமந்து நிற்கும் வலிமையுடையது ஆகமாட்டாதென்று அவளுடைய காலிலே விளங்கும் நூபுரங்கள் புதிய தேன் அலம்பிக் கொண்டிருக்கும் நீண்ட கூந்தலுடைய அவளின் இருகழல்களிலும் தாழ்ந்து கிடந்து எந்நோரமும் வாய்விட்டுப் புலம்பிக் கொண்டேயிருக்கும்.

பெண்கள் நடந்து செல்கையில் நீண்ட நெடிய கூந்தல் இடையின் பின்புறத்தில் ஆடிஅசைவது இயல்பே. அக்காட்சியைக் கண்ட கவிஞன் கொங்கைகளின் சுமைதாங்காமல் இடைநுடங்குவதாகக் கால்கொலுசினிடம் புலம்புகிறது என்று தன்குறிப்பை ஏற்றிப் பாடுகிறான். ஆதலால் இப்பாடல் தற்குறிப்பேற்றணி வகையாம்.

மல்லிகையே வெண்சங்கா வண்டூத வான்கரும்பு
வில்லி கணைதெரிந்து மெய்காப்ப -முல்லையெனும்
மென்மாலைத் தோளசைய மெல்ல நடந்ததே
புன்மாலை அந்திப் பொழுது.


பொருள்:- மல்லிகை அரும்புகளையே வெண்சங்காக எண்ணிக் கொண்டு வண்டினம் ஊதிஊதி முழக்குகின்றனவாம். சிறந்த கரும்பினாலான வில்லை உடைய மன்மதன் தன் மலர்க்கணைகளை ஆராயந்து எடுத்துவந்து தன்னைப் பற்றிய உண்மையினைப் பேணுதற்குத் தொடங்கினான். இப்படியாக முல்லை மலர்என்னும் மென்மையான மாலையானது தோளிலே கிடந்து அசைய புல்லிய மாலைப்பொழுதானது அசைந்து நடந்து வந்தது.

அந்தியின் வருகையை ஓர் பேரூர்வலமாக (ராஜபவனி) கவிஞன் உயர்த்திக் (உயர்வுநவிற்சி அணி) கூறியிருப்பதோடு வண்டானது இயல்பாக அமர்ந்து தேனெடுப்பதை மலரை சங்காக எண்ணிக்கொண்டு ஊதி முயங்குகின்றது என்று தன்குறிப்பை ஏற்றிக் கூறியமையால் தற்குறிப்பேற்றணியாகும்.

சிறப்புப் பாடம்! வலிமிகுமிடங்கள்

குறிப்பு:- சங்கர் இராஜகுரு போன்ற நண்பர்களின் வேண்டுதலுக்கிணங்கி இச்சிறப்புப் பாடத்தைத் தருகிறேன்.

சொல்லியங்களைப் பிழையின்றி அமைக்க முகாமையாகத் தெரிந்துகொள்ள வேண்டியவற்றுள் வலிமிகுமிடங்கள் மற்றும் வலிமிகாவிடங்கள் ஆகியவை அடங்கும். இப்பாடத்தில் வலிமிகுமிடங்களைப் பற்றிப் பார்ப்போம்.

வலி என்பது வல்லெழுத்துகளாம். அவ் வல்லெழுத்துகள் எங்கெல்லாம் மிகுந்து வரும் என்பதை அறிந்து எழுதப்பழகுவோம்.

சற்றேறக் குறைய வலிமிகுமிடங்கள் இருபத்தாறு அல்லது இருபத்தேழு இடங்களாகும். அவ்விடங்களை அறிவோம்.

1) அ இ உ - என்னும் சுட்டெழுத்துகளின் முன் வலிமிகும்.
காட்டு:-
அ+பையன் - அப்பையன்
இ+ பொருள் - இப்பொருள்
உ+ பக்கம் - உப்பக்கம்

2) அந்த இந்த உந்த என்னும் இடைச்சொற்களின் முன் வலிமிகும்.

காட்டு:-
அந்த+ பூனை - அந்தப்பூனை
இந்த + பை - இந்தப்பை
உந்த+ பக்கம் - உந்தப்பக்கம்.

3) எ-என்ற வினா எழுத்தின் முன்னும் எந்த- என்ற வினா இடைச்சொல்லின் முன்னும் வலி மிகும்.

காட்டு:-
எ+ பொழுது - எப்பொழுது
எந்த +திசை - எந்தத்திசை

4) அங்கு இங்கு எங்கு ஆங்கு ஈங்கு யாங்கு ஆண்டு ஈண்டு யாண்டு -எனும் இடப்பொருள் உணர்த்தும் மென்தொடர் குற்றியல் உகர இடைச்சொற்களின் முன் வலிமிகும்.

காட்டு:-
அங்கு + போ - அங்குப்போ
இங்கு + தா - இங்குத்தா
எங்கு + கொடுத்தாய் - எங்குக்கொடுத்தாய்
ஆங்கு + பார் - ஆங்குப்பார்
ஈங்கு + செய் - ஈங்குச் செய்
யாண்கு + பேசினான் - யாண்குப்பேசினான்
ஆண்டு + தாவினான் - ஆண்டுத்தாவினான்
ஈண்டு + கூடினர் - ஈண்டுக் கூடினர்
யாண்டு + சென்றான் - யாண்டுச்சென்றான்.

5) அப்படி இப்படி எப்படி எனும் இடைச்சொற்களின் முன் வலிமிகும்.
காட்டு:-
அப்படி + சொல் - அப்படிச்சொல்
இப்படி + கூறு - இப்படிக்கூறு
எப்படி + தந்தாய் - எப்படித்தந்தாய்

இக்கிழமைக்கான ஈற்றடி:- பூவைமேல் எத்தனை பூ!
அகரம்.அமுதா
3

29.சொற்பொருள் பின்வரு நிலையணி!

Posted in 

செய்யுளுள் முன்வந்த அதே சொல் மீண்டும் மீண்டும் வந்து வேறுபொருளைத்தராமல் அதே பொருளைத்தருமானால் அதற்குச் சொற்பொருட்பின்வரு நிலையணி என்று பெயர்.

எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு!


இக்குறளில் விளக்கு எனுஞ்சொல் பலமுறை வந்து தந்தபொருளையே மீண்டும் மீண்டும் தந்துநின்றமையால் சொற்பொருட் பின்வரு நிலையணியாம்.

செல்வத்துட் செல்வம் செவிச்செல்லம் அச்செல்வம்
செல்வத்து ளெல்லாந் தலை!


செல்வமென்ற சொல் பன்முறை வந்து தந்தபொருளையே தந்தமையால் சொற்பொருட் பின்வரு நிலையணியாம்.

இடும்பைக் கிடும்பை படுப்பர் இடும்பைக்
கிடும்பை படாஅ தவர்!

சொல்லுக சொல்லிற் பயனுடைய செல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்!

அருட்செல்வம் செல்வத்துட் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள!

இப்பாடல்களில் ஒருசொல் பன்முறை தோன்றி ஒருபொருளிலேயே நின்றமையான் இவையாவும் சொற்பொருட் பின்வரு நிலையணியாகும்.

இக்கிழமைக்கான ஈற்றடி:-

அகரம்.அமுதா
0

28. ஏகதேச உருவக அணி!

Posted in 
தொடர்புடைய இருபோருட்களுள் ஒன்றைமட்டும் உருவகம் செய்து மற்றொன்றை உருவகம் செய்யாமல் விட்டுவிடுவது ஏகதேச உருவக அணியாம்.

பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்
எண்ணிய தேயத்துச் சென்று!


பொருளைப் பொய்யா விளக்கு என உருவகப் படுத்திவிட்டு பகையை இருளென உருவகம் செய்யாமையால் ஏகதேச உருவக அணியாம்.

இக்கிழமைக்கான ஈற்றடி:-

அகரம்.அமுதா
2

27. உருவக அணி!

Posted in 
உவமானம் வேறு, உவமேயம் வேறு எனத்தோன்றா வண்ணம் உவமையின் தன்மையை உவமேயத்தில் ஏற்றயுரைத்தல் உருவக அணியாம்.

காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும்
ஏமப் புணைமன்னும் இல்!

காமக் கடல்- இதில் உவமையெது உவமேயமெது எனத்தோன்றாவண்ணம் அமைந்தமையால் உருவக அணியாகும்.

காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்
யாமத்தும் யானே உளேன்!

காமக் கடும்புனல் - இதில் உவமையெது உவமேயமெது எனத்தோன்றாவண்ணம் அமைந்தமையால் உருவக அணியாகும்.

காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும்
நாணுத்தாழ் வீழ்ந்த கதவு!

காமக் கணிச்சி - காமமாகிய கோடரி

இன்பவெள்ளம், கண்கயல், கைமலர், விழிவாள், பல்முத்தம், போன்றவையும் அப்படியே. உவமையெது உவமேயமெது எனத்தோன்றாமையால் உருவகமாயின.

இக்கிழமைக்கான ஈற்றடி:-

அகரம்.அமுதா
2

பாடம் 26 இல்பொருள் உவமையணி!

Posted in 
இயற்கையில் இல்லாத ஒன்றை (ஒருபொருளை) இருப்பது போலக் கற்பனை செய்துகொண்டு அக்கற்பனைப் பொருளை உவமையாக்குவதே இல்பொருள் உவமையணியாம்.

அன்பகத் தில்லார் உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று!


பாலையில் நீரின்றிக் காய்ந்து வரண்டுபோன வற்றல் மரம் மீண்டும் தளிர்த்தல் இயற்கையில் நிகழாத ஒன்று. உள்ளத்தில் அன்பற்ற உயிர்வாழ்வுக்கு இதனை உவமையாக்கியமையால் இஃது இல்லைபொருள் உவமையணியாகும்.

அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்!


மழலை தன் சிறுகையால் அளாவிய கூழை அமிழ்தினும் இன்சுவை உடையது என்கிறார் வள்ளுவர். அமிழ்து என்பது கற்பனையான பொருள். அமிழ்தினைக் கண்டவர்யார்? உண்டவர்யார்? கூழுக்கு உலகில் இல்லாத அமிழ்தை உவமையாக்கியதால் இல்பொருள் உவமையணியாகும்.

ஆக இல்லாத ஒன்றை இருக்கின்ற ஒன்றிற்கு உவமையாக்குதல் இல்பொருள் உவமையணியாம்.

இக்கிழமைக்கான ஈற்றடி:-

அகரம்.அமுதா
3

பாடம் 25 எடுத்துக்காட்டு உவமையணி!

Posted in 
உவமைக்கும் உவமேயத்திற்றும் இடையில் போல போன்று என்ற பொருள்தரும் உவமையுருபுகள் தொகைநிலையில் வருவதே எடுத்துக்காட்டு உவமையணி யாகும்.

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து!

உவமானம்:-

நுகர்வதால் அனிச்சமலர் வாடிவிடும்.

உவமேயம்:-

விருந்து படைக்கையில் நம்முகத்தில் சிறுகுறி தென்படினும் விருந்தினர் முகம் வாடிவிடும். போல, அதுபோல என்பன போன்ற உவமையுருபுகள் தொகை நிலையாதல் காண்க.


பகல்வெல்லும் கூகையைக் காகம் இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது!

உவமானம்:-

வலியில் குறைவலிபடைத்த காகமும் பகல்வேளையில் வலிபடைத்த கூகையை எளிதில் வென்றுவிடும்.

உவமேயம்:-

இவ்விகலாகக் கருதும் மன்னவன் தன்பகைமுடிக்க வேளைகருதிச் செயல்பட வேண்டும். உவமையுருபு தொகைநிலை.


துன்பத்தைக் கண்டு துவண்டு மருளாதே
இன்னல் விலகலாம் எக்கணமும் -அன்புள்ளாய்!
தோயும் இருள்விலக்கித் தோன்றுவான் ஆதவன்
காயில் இருக்கும் கனி!

உவமானம்:-

1.சூழ்ந்துள்ள இருள் சூரியன் தோன்றக் கெடும்.2.இன்சுவை பொருந்திய கனியானது துவர்ப்பும் புளிப்பும் கூடிய காயில் ஒளிந்துகிடக்கிறது.

உவமேயம்:-

துன்பம் வருதல் கண்டு மயங்காதே. அதையோர் பொருட்டாக் கருதாக்கால் மறைந்துவிடும். அதுபோல உவமையுருபு தொகைநலையாதல் காண்க.

இக்கிழமைக்கான ஈற்றடி:- "கருவிழி இல்லாத கண்!"

அகரம்.அமுதா
5

பாடம் 24 உவமையணி!

Posted in 
உவமை உருபுகள்:- போல, புரைய, ஒப்ப, உறழ, மான, கடுப்ப, இயைய, ஏய்ப்ப, நேர, நிகர, அன்ன, இன்ன போன்றவை உவமை உருபுகளாகும்.

உவமானத்திற்கம் உவமேயத்திற்கும் இடையே போல என்ற பொருள் தரும் உவமை உருபுகள் வெளிப்படையாக வருவது உவமையணியாகும்.

சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு!

உவமை:-

சுடுவதால் பொன்னானது மிகுதியான ஒளிசிந்தும்.

உவமேயம்:-

துன்பம் என்ற நெருப்பு சுடுவதனால் அறிவொளி மிகுந்து காணப்படும். இதில் போல என்ற உவமை உருபு வெளிப்படை.

கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளிந் தற்று!

உவமானம்:-

கூட்டாடும் அவைக்கு மக்கள் கூட்டம் நிறையும். கூத்தாட்டம் முடிந்தால் வற்றிவிடும்.

உவமேயம்:-

செல்வத்தின் நிலையும் அப்படியே. அற்று என்ற உவமையுருபு வெளிப்படை.
வருமுன்னர் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்வைத்தூறு போலக் கெடும்!
போல என்ற உவமை உருபு வெளிப்படையானது காண்க.

ஒருவர் உடலில் ஒருவர் ஒடுங்கி
இருவரெனும் தோற்றம் இன்றிப் -பொருவங்
கனற்கேயும் வேலானும் காரிகையும் சேர்ந்தார்
புனற்கே புனல்கலந்தாற் போன்று!

வெள்ள நீரில் மேலும் வெள்ளநீர் சேர்ந்தால் இரண்டிற்கும் எவ்வாறு வேறுபாடு காணமுடியாதோ அதுபொல இருவரும் ஒருவரில் ஒருவர் இணைந்தனர். இப்பாடலில் போன்று என்ற உருபு வெளிப்படையானதால் உவமையணியாம்.

இக்கிழமைக்கான ஈற்றடி:- மந்திரத்தால் மாங்காய் விழும்!
அகரம்.அமுதா

பாடம் 23 உயர்வு நவிற்சியணி!

Posted in 
கவிஞன் தான் கூறப்புகும் கருத்தை மிகைப்படுத்தி உயர்த்திக் கூறுவதே உயர்வு நவிற்சியணியாகும்.

அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்!

பசியோடிருப்பவனுக்கு கூழ் இன்சுவை கூட்டுவதுதான். ஆயினும் அக்கூழுள் தன் சிறுகுழந்தையின் பிஞ்சுவிரல்கள் பட்டவுடன் அதன்சுவை அமிழ்தைவிடக் கூடிவிடுகிறது எனக் கூறுவது தான் கூறவந்த கருத்தின் முகாமையை விளக்குவதற்காக கவிஞன் மிகைப்படுத்துவதாகும். கூழின் சுவையை உள்ளது உள்ளபடி கூறாமல் அமிழ்தைவிட உயர்ந்த சுவைமிக்கது எனக் கூறுவது உயர்வு நவிற்சி அணியாகும்.


குழலினிதி யாழினி தென்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்!

இசைக்கு மயங்காதோர் யாருமிலர். ஆயினும் வள்ளுவர் ஈன்றசேயின் முகாமையையும் சிறப்பையும் எடுத்துரைக்க அதன் குரல் குழல் யாழைவிட இனியது என்கிறார்.

செய்யாமற் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்ற லரிது!

நாம் ஒருவர்க்கு உதவிசெய்யாதபோதும் நமக்குத் தேவைப்படுங்கால் நாம் அழைக்காமல் தானாய்வந்து உதவி செய்பவரின் உதவி சிறந்ததுதான். அவ்வுதவியின் தன்மையை உயர்த்திக் கூற நினைத்த வள்ளுவர் வையகத்தை வழங்கினாலும் ஏன் வானகத்தையே வழங்கினாலும் அவ்வுதவிக்கு ஈடாகாது என்கிறார்.

கற்றதுகைம் மண்ணளவு கல்லா துலகளவென்(று)
உற்ற கலைமடந்தை ஓதுகிறாள் -மெத்த
வெறும்பந் தயங்கூற வேண்டாம் புலவீர்!
எறும்புந்தன் கையாலெண் சாண்!

கல்வியின் சிறப்பை யாவரும் உணரவேண்டும் என்பதற்காக இதுவரை நாம் கற்றுமுடித்திருப்பது கையளவு. கற்காமல் விட்டிருப்பது உலகளவு என உயர்த்திக் கூறப்பட்டிருப்பதால் இப்பாடல் உயர்வு நவிற்சியணியாகும். (எறும்பும் தன்கையால் எண்சான் என்ற உவமை எவ்வுயிரும் அதனதன் கைகளால் எண்சாண் உயரம்தான் என்பதை உணர்த்த எடுத்துக்காட்டப் பட்டிருப்பதால் இவ்வீற்றடி எடுத்துக்காட்டு உவமையணியாகும்.)

ஆக உள்ளது உள்ளபடி உரையாமல் மிகைப்படுத்திக் கூறுவனயாவும் உயர்வு நவிற்சியணியாகும்.

இக்கிழமைக்கான ஈற்றடி:- "சோம்புவதால் உய்வுண்டோ சொல்!"
அகரம்.அமுதா

பாடம் 22 இயல்பு நவிற்சியணி!

Posted in 
ஓர் மங்கைக்கு சிறப்பு சேர்ப்பது அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு போன்ற குணங்கள் என்பர் ஆன்றோர். அதுவே அழகுமாகும். அவ்வழகை மென்மேலும் மெருகேற்றுவது அகத்தூய்மையும் புறத்தூய்மையும் ஆடை அணிகலன்களுமாகும். அதுபோல மரபுப்பாக்களுக்கு பெருமையும் சிறப்பும் சேர்ப்பன இலக்கண அமைப்பும் அழகிய வடிவமுமாகும். அவ்வழகை மென்மேலும் மெருகேற்ற நம்முன்னோர்கள் மரபுப்பா என்ற மங்கைக்கு அணிகளைப் பூட்டி அழகுபார்த்தனர். அவ்வழகைத்தான் அணியிலக்கணம் என்கிறோம்.

ஓர் பெண்ணிற்கு பொட்டு பூ போன்ற அணிகலன்கள் எத்துணை முகாமையோ அத்துணை முகாமையானது பாக்களுக்கு அணிஇலக்கணம். பெண் அணியும் அணிகளின் வகைகளைத் தெரிந்துகொண்டோமானால் அவற்றை எங்கெங்கு அணிய வேண்டும் என்பதும் தெரிந்து விடும். எடுத்துக்காட்டிற்கு மூக்கணி. இதை மூக்கணி என்று அறிவோமானால் அதை எங்கணிவது என்பதும் தெரிந்துவிடும். அதுபோல் பாக்களுள் கையாளப்படும் அணிவகைகளைத் தெரிந்துகொண்டோமானால் அவற்றைக் நம்கருத்தாழத்திற்கேற்ப தேவைக்கேற்ப கையாளத் தெரிந்தவர்களாகி விடுவோம்.

ஓர் கவிஞனை சிறந்த இலக்கியவாதி என இனம்காட்டுவது அவன் கருத்துகளைக் கையாளும் முறையே. அக்கருத்தைச் செறிவூட்டுவது அணியாகும். ஆக நாம் நம் கருத்துகளை அனைவரும் விரும்பும் விதமாக எடுத்துரைப்பதற்கு அணிவகைகளை ஆழமாகக் கற்பது முகாமையாகிறது.

அணிவகைகள் மொத்தம் முப்பத்தைந்து வகைப்படும். அவற்றுள்:- 1.இயல்பு நவிற்சியணி 2.உயர்வு நவிற்சியணி 3.உவமையணி 4.எடுத்துக்காட்டு உவமையணி 5.இல்பொருள் உவமையணி 6.உருவகஅணி 7.ஏகதேச உருவகஅணி 8.சொற்பொருட் பின்வரு நிலையணி 9.தற்குறிப் பேற்றணி 10.பிறிதுமொழிதலணி 11.வேற்றுமையணி 12.வேற்றுப்பொருள் வைப்பணி 13.வஞ்சப்புகழ்ச்சியணி 14.நிரல்நிறையணி 15.மடக்கணி 16.இரட்டுற மொழிதலணி. 17.எதிர்நிலை உவமையணி. 18.ஐய அணி. 19.ஒருபொருள் வேற்றுமையணி.

இயல்பு நவிற்சியணி:-நாம் கூறவரும் கருத்தை எவ்வகை உவமை ஏற்றியும் உரைக்காமல் மிகைப்படுத்தாமல் உள்ளது உள்ளவாறே உரைப்பது உயர்வு நவிற்சியணி யாகும்.

காட்டு:-

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல(து)
அன்றே மறப்பது நன்று!

ஒருவர் நமக்கு செய்த உதவிக்கு நாம் என்றும் நன்றியுடன் நன்றிமறவாதிருக்கிறோம். நன்றிதனை மறப்பது நன்றல்ல என்பதை உணர்த்த வந்த வள்ளுவர் எவ்வுவமையையும் பயன்படுத்தாது உள்ளதை உள்ளவாரே உரைத்திருக்கிறார். உரைக்கவந்த கருத்தை உள்ளது உள்ளவாரே உரைத்துள்ளமையால் இப்பாடல் இயல்பு நவிற்சியணியாகிறது.

கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக!

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவ தென்ப திழுக்கு!

வையகம் பகலிழப்ப வானம் ஒளியிழப்ப
பொய்கையும் நீள்கழியும் புள்ளிழப்ப -பையவே
செவ்வாய் அன்றில் துணையிழப்பச் சென்றடைந்தான்
வெவ்வாய் விரிகதிரோன் வெற்பு!

கதிர்சாயுங்கால் பாரில் பகல்வேளை நீங்கி இரவு பிறப்பதும் வானம் ஒளியிழந்து இருள்சூழ்வதும் குளங்களிலும் மற்ற நீர்நிலைகளிலும் இரைதேடும் பறவைகள் அவற்றை நீங்கித்தன் கூட்டையடைவதும் இயல்புதானே. ஆக கதிர்மறையும் மாலைப்பொழுதை அப்படியே உள்ளது உள்ளவாறே படம்பிடித்தாற்போல் காட்டியுள்ளமையால் இப்பாடல் இயல்பு நவிற்சியணியாகும்.

கூறப்புகுங் கருத்தை எவற்றோடும் ஒப்புமைப் படுத்தாமல் இயல்பாக நவில்வது இயல்பு நவிற்சியாகும்.

இயல்பு நவிற்சியணியைப் பயன்படுத்தி இக்கிழமைக்கான ஈற்றடிக்கு வேண்பா எழுத அழைக்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக