வியாழன், 14 நவம்பர், 2013

பாகம்

வெண்பா பகுதியில் தமிழ்ப் பாவடிவங்களிலேயே தலைசிறந்த அழகான புரிந்துகொண்டால் பாடுதற் கெளிய அதேவேளையில் இலக்கணம் அறிந்த பெரும் பாவலர்களையும் மண்ணைக் கவ்வச் செய்துவிடும் ஆற்றல் படைத்த வெண்பாவைக் கற்க விருக்கிறோம்.

முதலில் வெண்பா என்றால் என்ன? என்பதை மேலோட்டமாகப் பார்த்துவிட்டு தமிழின் தொன்மையையும் சற்றே பார்ப்போம்!

வெண்பா என்றால் வெள்ளைப் பாவேன்றும், கள்ளங்கபட மற்ற பாவேன்றும், குற்றமற்ற பாவேன்றும், தூய்மையான பாவேன்றும், பொருளற்ற பாவேன்றும் பொருள் கொள்ளலாம்.

மேலும் வெண்பாவிற்கு உரிய வெண்சீர் வெண்ளை இயற்சீர் வெண்டளை ஆகிய வெண்+டளைகளால் ஆனதாலும் வெண்பா எனுன் பெயர் பெற்றதாகவும் கொள்ளலாம்.

வெண்பாவை வெண்+பா எனப் பிரித்தால் வெள்ளைப் பா என்றாகும் அல்லவா?

வெண்மை தூய்மைக்கு உவமை அல்லவா?
வெண்மை சமாதானத்திற்கு உவமை அல்லவா?
வெண்மை ஒன்றுமற்றதுபோல் தோன்றும் ஆனால் எழு நிறங்களும் அடங்கிய ஓர் நிறமல்லவா?
வெண்மை கள்ளங்கபடம் அற்ற தல்லவா? (கள்ளங்கபடமற்ற மனதை வெள்ளை மனம் என்கிறோமே!)

இப்படி பல பொருளை வெண்பா என்னும் ஒரு சொல் தருமென்றால் வெண்பாவால் எழுத முடியாத நிகழ்வும் கருத்தும் இருக்க முடியுமா?

(வெண்பா என்ற சொல்லுக்கு வேறு பொருளும் இருப்பதாகக் கருதினால் பின்னூட்டில் தெரியப் படுத்தலாம்)

தொன்மை!

உலக மொழிகளுள் தமிழ்மொழியே முதன்மையான மொழியாகும். காரணம் இதன் இயல்பும் எளிமையும் இனிமையுமே ஆகும். தமிழ் எழுத்துக்கள் எல்லாம் இயல்பான ஒலியுடையவை. இவ்வெழுத்துக்கள் தனித்தும் சொல்லின் கண்ணும் ஒரே தன்மையாக ஒலிக்கும் இயல்புடையவை. தோன்றல் திரிதல் கெடுதல் என்னும் மூன்று வகையில் புணர்ந்து சொன்னயமும் பொருள் நயமும் ஓசை நயமும் பயக்குந்தன்மை தமிழ் எழுத்துகளுக்கே உரிய தனித்தன்மை ஆகும்.

தமிழ்மொழி மிக எளிதில் பேசவும் எழுதவும் படுவது. நிரம்பிய இலக்கியச் செல்வமுடையது. முற்ற முடிந்த திண்ணிய இலக்கண வரம்புடையது. கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தின் முன்தோன்றி மூத்தது.

பல்லுயிரும் பலவுலகும்
படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்போருள்முன்
இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமும் களிதெலுங்கும்
கவிம்மலையா ளமுந்துளுவும்
உன்னுதிரத் துதித்தெழுந்தே
ஒன்றுபல வாயிடினும்
ஆரியம்போல் உலகவயக்
கழிந்தொழிந்து சிதையாநின்
சீரிளமைத் திறம்வியந்து
செயல்மறந்து வாழ்த்துதுமே! 


என மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை அவர்கள் வியந்து பாடியிருக்கிறார் என்றால் தமிழின் இனிமையிப் பற்றிச் சொல்லவும் வேண்டுமோ?

உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்கிற உயரியக் கருத்துக்களைத் தன்னகத்தே தேக்கி அதைக் காலங்காலமாக உலகுக்கு வழங்கிவரும் உயரிய ஆற்றல் படைத்தமொழி நம் செந்தமிழ் ஒன்றே!

நடை!
நம் தமிழில் செய்யுள் நடை உரை நடை என இருவகை உண்டு.
பழங்காலம் தொட்டு இவ்விரு நடை எழுதும் தமிழில் பயின்று வந்தன.

உரைநடையிட்ட பாட்டுடைச் செய்யுள் என்பது சிலப்பதிகாரம். இவ்விரு நடையும் தமிழுக்கு இருகண் போன்றவை.

இவ்விரு நடையில் சிலவகை எழுத்தில் பலவகைப் பொருளை எண்வகைச் சுவையும் ததும்ப சொல்லணி பொருள் அணி என்னும் இருவகை அணினலத்துடன் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் ஆழமுடைத்தாதல் முதலிய அழகுமிளிற கருத்தைக் கவரும் கற்பனைச் செறிவுடன் அமைத்துக் கூற ஏற்ற இடம் செய்யுள் ஆகும்.

தொன்தமிழில் பாக்கள் நான்கு வகைப்படும் அவை வெண்பா ஆசிரியப்பா கலிப்பா வஞ்சிப்பா ஆகும்.

வெண்பா ஒழிய மற்ற முன்று பாவகைகளிலும் விருத்தப் பாக்கள் இடைக்காலத்தில் தோன்றின. சிந்து மற்றும் வண்ணப்பாக்களும் இடைக்காலத்தில்தான் தோன்றின.

பாவகைகளிலேயே மூத்த இளமையான பிற பாக்களுக்குறிய தலைகள் இடம்பெறாது நடைபோடுகிற ஆற்றல்வாய்ந்த வெண்பாவையே இப்பகுதியில் நாம் கற்கவிருக்கிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக